×

அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்த ₹6.50 கோடி மதிப்பு ஆற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் அதிரடி ஆரணியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான

ஆரணி, ஜன.4: ஆரணியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ₹6.50 கோடி மதிப்பு ஆற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநநி ஆற்று மேம்பாலம் அருகில் தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த மண்டபம் அருகில் நீர்வளத்துறைக்கு சொந்தமான நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சேவூரில் இருந்து திருமண மண்டபம் வழியாக இரும்பேடு, ஈச்சந்தாங்கல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் ஆற்று நீர்வரத்து கால்வாயாக இருந்து வருகிறது. இதனை, அதிமுக அம்மா பேரவை மாவட்ட அவை தலைவர் கருணாகரன், இவரது மகன்கள் ரமேஷ்பாபு, மகேஸ்பாபு ஆகிய இருவருக்கு சொந்தமான வீடு மற்றும் திருமண மண்டபம் அருகில் உள்ள நீர்வரத்து கால்வாய்யை ஆக்கிரமித்து சிமென்ட் சீட் அமைத்து குடோன் மற்றும் மண்டபத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மேலும், மழை காலங்களில் கமண்டல நாநகதி ஆற்றில் இருந்து இரும்பேடு உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமித்திருந்ததால், ஏரிகளுக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் இருந்து வந்தது.

இதனால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஆற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமித்து குடோன், திருமண மண்டபம் சுற்றுச்சுவர் அமைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். அப்போது, நீர்வளத்துறை உதவி பொறியாளர் மணிமாறன், ஆர்ஐ அசோக், விஏஓ புருஷேத்தமன், சர்வேயர் அசோக், எஸ்ஐ ஷாபுதீன் மற்றும் அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி மூலம் ஆற்றை ஆக்கிரமித்து வைத்திருந்த இடம், கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அதிகாரிகள் அகற்றினர். மேலும், நீர்வளத்துறைக்கு சொந்தமான ₹6.50 கோடி மதிப்பிலான 15 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, நீர்வளத்துறைக்கு சொந்தமான ஆற்றுநீர்வரத்து கால்வாயை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்த ₹6.50 கோடி மதிப்பு ஆற்று நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் அதிரடி ஆரணியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Water Resources Department ,Arani ,Tiruvannamalai District ,Arani Town ,Kamandala ,Naganani ,Dinakaran ,
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு